ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இரண்டாயிரத்து 849 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும். மாணவர்கள் உரிய நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வது மிகவும் முக்கியமானது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.30ற்கு பரீட்சை ஆரம்பமாகும். முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 9.30 முதல் 10.45 வரை நடைபெறும். முதலாம் பகுதி வினாத்தாள் முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 12.15 வரை நடைபெறும் என அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 809 மாணவர்கள் தோற்றுகின்றனர். தமிழ்மொழி மூலம் 79 ஆயிரத்து 787 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 92 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சை மத்திய நிலையங்களும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியுள்ள மாணவர்களுக்கும் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏழாயிரத்திற்கும் அதி;கமான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகளை சூழவுள்ள பிரதேசங்களில் அரசியல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், பரீட்சை திணைக்களத்துடன் இணைந்து புலமைப்பரிசில் பரீட்சைக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துகிறது.
அதன்படி, அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து, 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று, நாட்டின் சகல பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளாகவும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாகவும் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.