ஒக்டோபர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டு
ஒக்டோபர் மாதம் வரைக்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஒக்டோபர் மாதம் முதல் இ-கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
“சுமார் 23 வருடங்களாக ஒரே சப்ளையரிடம் இருந்து திரும்பத் திரும்ப கொள்வனவு செய்தோம்.. இந்த முறை மறுபடியும் கொள்வனவு கோரி வந்தது.. முடியாதுன்னு கூறிவிட்டு டெண்டர் இற்கு அழைப்பு விடுத்தேன்.
அதன்படி ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்தது. இலங்கையில் உள்ள சட்டத்தின் படி சுமார் இரண்டு மாதங்கள் பணியை செய்வதில் தாமதமானது. அந்த தாமதம்தான் பிரச்சினையாக இருந்தது. அதனால்தான் கடவுச்சீட்டு வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
அத்தியாவசியமானவர்களுக்கு மட்டும் ஒக்டோபர் வரை வழங்குவோம்.
நாங்கள் ஒரு நாளைக்கு 900 கடவுச்சீட்டுக்கள் வழங்குகிறோம். ஆனால் 1,000 பேர் வரை மதிப்பிட்டிருக்கிறோம், திடீரென வருவோருக்கு அது பொருந்தும்.
இதுவரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் 23% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டவர்கள் அதனை இதுவரைக்கும் பயன்படுத்தவில்லை.
இந்த இரண்டு மாதத்திற்கான கடவுச்சீட்டை அவசியமானால் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். இல்லையெனில், ஒக்டோபரில் புதிய கடவுச்சீட்டினை பெறுவீர்கள்.
E – PASSPORT இற்கான டெண்டரை நாங்கள் அழைத்தோம். பழைய கடவுச்சீட்டு புத்தகத்திற்கு $5.89 செலுத்தப்பட்டது. புதிய கடவுச்சீட்டு புத்தகத்திற்கு விலை $5.50″.
கேள்வி – அமைச்சரே பொலிஸ்மா அதிபர் இல்லாத காரணத்தால் ‘யுக்திய’ நிறுத்தப்பட்டதாக பலரது கருத்து. கடந்த காலங்களிலும் எங்கும் துப்பாக்கிச் சூடு நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ‘யுக்திய’ இன்னும் நடைமுறையில் இருக்கிறதா?
“‘யுக்திய’ நடவடிக்கை முடங்கியுள்ளது. முடங்கியதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பொலிஸ்மா அதிபர் அவர்களே ஜூம் மீட்டிங் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு இதனை நடத்திச் சென்றார். உண்மைதான் ‘யுக்திய’ நடவடிக்கை முடங்கியிருக்கிறது..”