கல்வி பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர்
கல்வி பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியல்மயமான கல்விமுறை அதிலிருந்து விடுபட வேண்டும். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற விசேட செயலமர்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐந்து வருடங்களின் பின்னர், நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளும் அதிபர்களின் பங்களிப்புடன் நடைபெறும்.
அரசாங்கம் என்ற ரீதியில், கல்விக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
கல்வியின் மூலம் அறிவை மாத்திரம் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்க முடியாது. தொழிலுக்காக மாத்திரம் கல்வி வழங்கப்படுவதில்லை.
நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கி நாட்டை மாற்றக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே நோக்கமாகும். அதன்படி, அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
வளமான நாடொன்று பொருளாதார ரீதியாக மாத்திரம் வளமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கலாசாரம், விழுமியம் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றிலும் அது வளமாக இருக்க வேண்டும். அவ்வாறானதொரு சமுதாயத்தில் வாழவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
தற்போதைய சமூகத்தில் கல்வியில் அதிக நம்பிக்கை இல்லை. இதனால். அவர்களிடையே நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும்.
கல்விக் கட்டமைப்பில் இதுவரை இருந்துவந்த பலவீனம் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கல்வியியளாளர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், கல்விக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.