காசாவின் சுகாதாரத் துறையை இஸ்ரேல் அழிப்பதாக குற்றச்சாட்டு.
ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் மீது மீண்டும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. காசாவின் சுகாதாரத் துறையை இஸ்ரேல் அழித்துக்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு நிபுணர் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
பலஸ்தீன் பகுதிகளில் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பலஸ்தீனிய மருத்துவ ஊழியர்களின் வாகனங்களை இஸ்ரேல் இலக்குவைத்துத் தாக்கி வருகின்றது. சுகாதாரத் துறை ஊழியர்களை வேண்டுமென்றே கொல்வதாகவும் இந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினரை பிடித்து வைத்து சித்திரவதை செய்வதாகவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இவை கடுமையான போர் குற்றம் என்றும் இந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவின் சுகாதாரக் கட்டமைப்புக்களைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என குழுவின் தலைவர் நவிபிள்ளை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் தாக்குதலினால் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் உட்கட்டமைப்புக்களும் உருக்குலைந்துள்ளன.