கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும்
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனால் தான் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்திருக்கிறோம், அந்தக் காலத்தைக் கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவுசெலவுத்திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது, வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.
இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.
2030 இல் இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது. எனவேதான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கு மட்டுமன்றி இந்த இலக்கு நிறைவேறும் வரை இந்த நிதியை வழங்குவோம். இதனை வருடத்திற்கு 02 பில்லியன் வரை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும்.
இந்த நிதி நிர்வாகத்தையும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் ஒரு சுயாதீன நிதியத்திற்கு நாம் ஒப்படைப்போம். மீதமுள்ள பகுதி நிர்வாக சபைக்கு உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது. மைதானங்கள், உபகரணங்கள் என எதற்கு இந்த நிதி செலவிடபபட்டாலும் அது மூலதனச் செலவில் குறிப்பிடப்படும். எனவே, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பாடசாலை கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதே அதன் அர்த்தம். அதன் பின்னர் எமக்கு மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்ற முடியும்.
நாம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நிதியை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவே நாம் பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு கொண்டு வருவோம்.
மேல்மாகாணத்தில் கிரிக்கெட் பற்றிப் பேசும்போது கொழும்பில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர பாதுக்க, கிரிந்திவெல, அகலவத்தை போன்ற பகுதிகளில் கிரிக்கெட் எந்த வகையிலும் வளர்ச்சியடையவில்லை. எனவே அனைத்து பாடசாலைகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
கிரிக்கெட் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு. எல்லா ஆட்டத்திலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நம்மால் வெல்ல முடியும். எனவே இதற்காக பணத்தை செலவிட தயாராக உள்ளோம். அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.
நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வளமான தேசமாக மாற்றவும் அவசியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் மட்டுமன்றி பாடசாலைகளில் கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ்வதை உறுதி செய்வோம். பொருளாதாரம் என்பது பணம். விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டால் நாமும் அதற்குள் நுழைவோம். மேலும், விளையாட்டை வணிகமயமாக்கினால், அதை அரசியல் தலையீடு இல்லாமல் பேணிக் கொள்வோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.