Home » கொத்தலாவல மருத்துவ பீடம் குறித்த அரசாங்கத்தின் முடிவுக்கு சஜித் எதிர்ப்பு

கொத்தலாவல மருத்துவ பீடம் குறித்த அரசாங்கத்தின் முடிவுக்கு சஜித் எதிர்ப்பு

Source

ஸ்ரீமத் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவப் பட்டப்படிப்பு இலங்கை மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்கையாகும். இதற்கமைய ஆண்டுதோறும் தற்போது 50 உள்நாட்டு மாணவர்கள் முப்படைக்கு அல்லது பொலிஸூக்கு கெடட் அலுவலராக இணைந்து கொள்வதன் மூலமும், தகைமைபெற்ற வெளிநாட்டு மாணவர்களும் 100 உள்வாரி மாணவர்கள் மற்றும் 150 மாணவர்கள் கட்டண முறையில் மாத்திரம் இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இதை நிறுத்துவது நமது நாட்டில் கல்வித் துறையில் மாணவர்களுக்கான வாய்ப்புகளை இழக்கச் செய்கின்றது. இது பாரியதொரு தவறு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

கொத்தலாவல மருத்துவ பீடத்திற்கு உள்நாட்டு மாணவர்களைச் சேர்ப்பதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட கருத்தை முன்வைக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இந்த மருத்துவப் படிப்பு நமது நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தருகின்றன. நமது நாட்டில் உள்ள மருத்துவ மாணவர்கள் இந்தப் பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பை இழப்பதன் மூலம் பாதகமான பல விடயங்கள் நடக்கும். இந்தப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் சுமார் 139 இலட்சங்களை செலவிடுகின்றனர். இதை நிறுத்துவதன் மூலம், 400 முதல் 500 இலட்சம் வரையில் வெளிநாடுகளில் செலவிட்டு பட்டம் பெற வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான செலவுகள் டொலர்களில் நடப்பதால், நமது நாட்டில் தக்கவைக்கக்கூடிய டொலர்களின் அளவும் இழக்கபடுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இந்த மருத்துவப் படிப்பைப் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு கிழக்கு, சபரகமுவ, ஊவா போன்ற பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வியின் கீழ் மருத்துவப் பட்டங்களைப் படிக்க வாய்ப்பு இருந்தாலும், அவர்கள் தொலைதூரத்தில் இருப்பதால் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை நாடுகின்றனர். 

இதன் விளைவாக, இந்தப் பல்கலைக்கழகங்களில் மேலதிக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்புகள் கிட்டுகின்றன. கொத்தலாவல மருத்துவ பீடம் மூடப்படுவதால் மாணவர்களின் இலவசக் கல்விக்கான பல வாய்ப்புகளையும் இழக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

கொத்தலாவல மருத்துவ பீடத்திற்குள் கட்டுபெத்த மருத்துவ பீட மாணவர்களுக்கு பல வசதிகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூடுவதனால் அந்த வசதிகளையும் இழக்க வேண்டி வருகிறது. கல்வித் துறையில் மாணவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதே தவிர, அவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. நமது நாட்டில் கிட்டத்தட்ட 15,000 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வாறான தருணத்தில், மருத்துவப் படிப்புகளை அதிகரிப்பதே தீர்வாக இருக்க வேண்டும். அவற்றை நிறுத்துவது தீர்வாகாது. ஆனால் இந்த அரசாங்கம் அந்த வாய்ப்புகளையும் நம்மிடமிருந்து பறிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

நமது நாட்டில் இலவசக் கல்வியை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும், நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை நவீன கல்வித் திட்டத்தை அணுகப் பயன்படுத்த வேண்டும். இலவசக் கல்வியை வலுப்படுத்தும் போர்வையில் கொத்தலாவல மருத்துவ பீடத்தை மூடக்கூடாது. இதனால் நமது நாட்டு இளைஞர்கள் தங்களுக்குத் தகுதியான வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

அரசாங்கம் தற்போது தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இலவசக் கல்வியை வலுப்படுத்துவதோடு, கல்விக்கான ஏனைய வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும். வாய்ப்புகள் அதிகரிக்கும் போது, ​​இலவசக் கல்வி மூலம் வழங்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, இந்தத் தவறான முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இதுவே காலத்தின் தேவையாகும். பிள்ளைகளுக்கான கல்வி வாய்ப்புகளை மறுக்கக்கூடாது. மாறாக விரிவுபடுத்தப்பட வேண்டும். காலாவதியான பழமைவாத கோட்பாடுகளின் கைதிகளாக மாணவர்களை வைத்திருக்கக்கூடாது. காலத்தின் தேவை குறித்த புரிதலைப் பெற வழிசமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

இந்த பட்டபடிப்பை மாணவர்களுக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி எடுக்க முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image