Home » கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை கடும் மழை.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை கடும் மழை.

Source

களனி கங்கைக்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் களனி கங்கையை அண்மித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உள்வீதிகளில் பயணிப்பவர்கள் மற்றும் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.

அத்தனகலு ஓயா பகுதிகளிலும் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. எனவே, திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

ஊறுவல் ஓயா பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

களு மற்றும் கிங் கங்கையின் மேற்புர பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. அதைச் சுற்றியுள்ள மக்களும் எச்சரிக்கை அறிவிப்புகளை கவனிக்க வேண்டும்.

பல மாவட்டங்களுளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி போன்ற பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களின் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்துகிறது.

12 மாவட்டங்கள் பாதிப்பு:

இதனிடையே, 12 மாவட்டங்களின் 66 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33 ஆயிரத்து 379 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. 238 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1751 குடும்பங்களைச் சேர்ந்த 6954 பேர் 81 தங்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பியகம, கட்டான மற்றும் ஜாஎல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 8 படகுகளுடன் கடற்படை நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடுவெல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக பல வீதிகள நீரில் மூழ்கியுள்ளன.

பண்டாரகம, வலல்லாவிட்ட, புலத்சிங்கள, மில்லனிய, மதுரவெல பிரதேச செயலகப் பிரிவுகளின் வீதிகள் அவற்றில் அடங்கும்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் பல வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவசர காலங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 0112 136 136 அல்லது 0112 136 222 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமும் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம்.

மேல் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கடற்படை பல நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இந்த நிலைமை காரணமாக கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளன.

அத்துடன், களனி கொலன்னாவ மற்றும் கடுவெல கல்விப் பிரிவுகள் மற்றும் கம்பஹா கல்வி பிரிவில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்படும் என மேல்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் கம்பஹா மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளது என விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவையான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறு விமானப்படையினருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை வானிலிருந்து கண்காணிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரத்மலானை, ஹிகுராக்கொட மற்றும் பலாலி விமானப்படைத் தளங்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற அனர்த்த நிலமைகளை எதிர்கொள்ளும் சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

கேகாலை மாவட்டமும் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. 182 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image