Home » கௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு!

கௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு!

Source

“கிளிநொச்சி – கௌதாரிமுனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மணல் அகழ்வினால் கடல் நீர் கிராமத்துக்குள் உட்புகக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது. இந்தப் பிரதேச மக்கள் வாழுகின்ற உரிமையைக்கூட இழக்க நேரிடலாம். அதனால் உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடுக்கவுள்ளோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனையில் பல இயற்கையான மணல்மேடுகள் காணப்படுகின்றன. இந்த மணல்மேடுகளானது கடல் நீர் உட்புகாமல் தடுப்பணைகளாகச் செயற்பட்டு வருகின்றன.

ஆனால், கடந்த சில வருடங்களாக இங்கு மணல் அகழ்வு மிக மோசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் கடல் நீர் உட்புகுந்து இந்தக் கிராமமே முற்றாக அழிந்து விடக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனைத் தடுப்பதற்காக இந்தப் பிரதேச மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தார்கள். மணல் அகழ்வு செய்கின்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தியும் போராடியிருந்தார்கள். அதன்பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் பூநகரி பொலிஸாரால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்திலே மணல் அகழ்வுக்குத் எதிராகத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அந்தத் தடை உத்தரவுக்கு எதிராக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஒன்றையும் தாக்கல் செய்தார்கள்.

அதன்பிரகாரம் குறித்த மணல் அகழ்வு கனிய வளங்கள், சுரங்க திணைக்களத்தின் அனுமதி பெற்று மேற்கொள்வதாகவும், இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து பேண முடியாது என்ற கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதன் காரணமாக தற்போது வரை தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்றையதினம் நானும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும்  மணல் அகழ்வு இடம்பெறும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம்.

அந்தப் பிரதேசத்தில் ஏறக்குறைய 15 அடிக்கு மேலாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மணல் அகழ்வினால் சுற்றுச்சூழல் மாசடைகின்றது.  இயற்கை தாவரங்கள் அழிவடைகின்றன. கடல் நீர் கிராமத்துக்குள் உட்புகக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது.

இந்தப் பிரதேச மக்கள் வாழுகின்ற உரிமையைக்கூட இழக்க நேரிடலாம். அதனால் உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடுக்கவுள்ளோம். அதன் பின்னர் இந்த மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

ஏற்கனவே ஏழு வருட கால சட்டப் போராட்டம் நடைபெற்றிருந்த போதும் இந்த மக்கள் தொடர்ந்தும் தாங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்கின்றார்கள். கடல் நீர் உட்புகுந்து இந்தக் கிராமத்தை அழித்துவிடும் என்ற அச்சத்தில் அந்த மக்கள் வாழ்கின்றார்கள். இந்த மக்களுக்காக நாங்கள் மீண்டும் ஒருமுறை சட்டப் போராட்டத்தை நடத்த இருக்கின்றோம்,” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image