சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக புதிய கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வெற்றி ஒற்றுமையான நாடு என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இன்று உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. இதில் பத்துக்கும் அதிகமான கட்சிகளும், அரசியல் குழுக்களும் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி பிரிவு, மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் பேரவை, அர்ஜுனா ரணதுங்க தலைமையிலான பிரஜைகள் பொதுமக்கள் இயக்கம் என்பன இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டன.
இதற்கு மேலதிகமாக ஜனநாயக்க மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பன இதுபற்றிய இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கின்றன.
கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இந்தக் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக பணியாற்றவிருக்கின்றன.
தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் என்பனவற்றின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
எதிர்கால பணிக்கான ஆரம்ப நடவடிக்கையாக இதனை குறிப்பிட முடியும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.
இது மக்கள்சார்பு கூட்டணியாகும். மோசடியான அரசியல் இன்றி மக்களுக்கு தீர்வு வழங்குவது இதன் நோக்கமாகும். நாட்டுக்குத் தேவையான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது இதன் இலக்காகும் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.