சந்தையில் நெல்லின் விலை அதிகரித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர், சந்தையில் நெல்லின் விலை அதிகரித்துள்ளதாக சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
தனியார் துறை அதிக விலை கொடுத்து நெல்லை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. அதன்படி, 105 முதல் 110 ரூபாய் வரை இருந்த ஒரு கிலோ கீரி சம்பா நெல்லின் விலை தற்போது 130 ரூபாவையும் விட அதிகரித்துள்ளது.
நாட்டில் முதன்முறையாக ஒரு கிலோ சம்பா நெல்லின் விலை 130 ரூபாவை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக 600 கோடி ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக 50 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக 36 களஞ்சியசாலைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை திறந்துள்ளது.
ஆனால், இதுவரை விவசாயிகள் போதிய நெல்லை சபைக்கு விற்பனை செய்யவில்லை என சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு லட்சம் மெற்றிக் தொன் நெல்லை மாத்திரமே விவசாயிகள் சபைக்கு விற்பனை செய்துள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபை, விவசாயிகளுக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்காக அமைக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெற் செய்கையாளர்களையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் அதேவேளை, சந்தையில் அரசியின் விலையை நிலையாக வைத்திருப்பதே நெல் சந்தைப்படுத்தல் சபையின் நோக்கமாகும்.
இம்முறை சிறுபோகத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன், தனியார் துறையினர் நெல்லை கொள்வனவு செய்வதன் மூலம் அரசாங்கத்தின் எண்ணம் நிறைவேறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.