சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்கான வட்டி விகித திருத்த யோசனை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்மான யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்இ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அநேகமான சிரேஷ்ட பிரஜைகளின் பிரதான வருமானமாக அவர்களின் ஓய்வூதியம் அல்லது வங்கி வைப்புத்தொகைக்கான நிலையான வட்டி காணப்படுகிறது.
வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு கடன் பெற்றவர்கள் அண்மையில் கோரியதாகவும், அதன்படி கடன் வட்டி வீதம் குறைக்கப்பட்ட போது வங்கி நிலையான வைப்பு வட்டி வீதம் இயல்பாகவே குறைவடைந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டி விகிதத்தை சேர்த்து அரசாங்கம் செலுத்தியது. அவ்வாறு வங்கிகள் செலுத்தும் அதிகப்படியான வட்டிக்காக அரசாங்கம் எண்ணாயிரத்து 800 கோடி ரூபாவை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து திறைசேரி தயாரித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதன்டிஇ தமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.