ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை புதன் கிழமையுடன் நிறைவடைகிறது
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் நடவ0டிக்கை எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், செலவு செய்யும் தொகையும் அதிகரிக்கும்.
1994ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டு பிரதான வேட்பாளர்களைத் தவிர வேறு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் 4.08 வீதமாகும்;. கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களைத் தவிர, எஞ்சிய 33 வேட்பாளர்கள் 2.5 சதவீத வாக்குகளைப் பெற்றனர்.
2 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாத வேட்பாளர்களின் கட்டுப்ப பணம் அரசுடமையாக்கப்படும் என பெஃப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு குழுக்கள் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையும்.
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரச்சினையல்ல எனவும், முன்வைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி நிதியை ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு மதிப்பீடு 10 பில்லியன் ரூபாவை தாண்டவில்லை என யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
வாக்குச் சீட்டு நீட்டிக்கப்பட்டால், வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேர்தல் ஆணைணக்குழு செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் போது நிதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.