ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவது இதன் நோக்கமாகும். ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
கட்டுப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும். தபால் மூலமான தேர்தலுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நிறைவடையும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் திணைக்களத்தில் 12 ஆயிரம் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்தார்.
நியமிக்கப்பட்ட வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு அப்பாற்பட்டஇ வேறு மத்திய நிலையங்களில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் முறைகேடுகள் இடம்பெறலாம் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான போலிப் பிரசாரங்களை பரப்புவதை தவிர்க்குமாறு அவர் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேறு மத்திய நிலையங்களில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என பெஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எல்ரிரிஈ காலத்திலும் வாக்களிக்க முடியாத மக்களுக்காக இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இது ஒன்றும் புதிய சட்டம் அல்ல என்று ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள தெரிவித்தார்.
இது 1981ஆம் ஆண்டு முதல் ஒரு பாரம்பரியமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.