ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் நாளை
ஜனாதிபதித் தேர்தலின் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் நாளை வெளியிடப்பட இருக்கின்றது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹொட்டலில் இந்த நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.
“முடியும் இலங்கை” என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரகடனம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இலங்கையை முன்னோக்கிக் கொண்டு செல்வது பற்றிய யோசனைகள் இதில் அடங்கியுள்ளன.
இதேவேளை, “முடியும் இலங்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் முதலாவது பொதுமக்கள் கூட்டம் நுகேகொட நகரில் இன்று இடம்பெறவிருக்கின்றது.
இதேவேளை, தேர்தலின்போது போலி உறுதிமொழிகளை வழங்காது, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஐந்தாண்டுத் திட்டம் தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு தமது அரசாங்கத்தின் கீழ் உத்தரவாத விலை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இது பற்றிக் கருத்துக் கூறினார்.
விவசாயத் துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். விவசாயிகளுக்கான உரமானியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான ஆணைக்குழுவொன்று ஏற்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாரிய அளவிலான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதுவரை ஏற்படவில்லை என்றும் அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
சமுர்த்தி வேலைத்திட்டத்தை வலுவூட்ட எதிர்பார்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.