Home » தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் புகலிடக் கோரிக்கையாளர்கள்: அவசர இடமாற்றத்திற்கு கோரிக்கை

தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் புகலிடக் கோரிக்கையாளர்கள்: அவசர இடமாற்றத்திற்கு கோரிக்கை

Source
தனிமைப்படுத்தப்பட்ட பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழு, தாங்கள் பாதுகாப்பற்றதாகவும் மறக்கப்பட்டதாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளதோடு, பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுவர் துன்புறுத்தல் மற்றும் தங்களுக்குள்ளேயே காயங்களை ஏற்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்பது குறித்தும், இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) இரண்டு வருடங்களுக்கு மேலாக சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐக்கிய நாடுகள் புலனாய்வாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பின் அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக டியாகோ கார்சியாவிற்கு சென்றுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியாவை 2021 ஒக்டோபரில் வந்தடைந்ததோடு, புகலிடம் கோரி கனடா செல்லும் வழியில் தமது படகு பழுதடைந்தமையால் அவர்கள் இந்த தீவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. புகலிடக் கோரிக்கை குழுவிற்குள்ளேயே, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற சவம்பவங்கள் பதிவாகி வருவதோடு, அதிகரித்த மன உளைச்சல் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாலியல்வன்முறைகள் துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்தால் எந்த பயனும் இல்லை என புகலிடக் கோரிக்கையாளர்கள்  கருதுவதாகவும், பாதுகாப்பு நீதி போன்ற விடயங்களில் முன்னேற்றம்  ஏற்படப்போவதில்லை என அவர்கள் கருதுவதே அதற்குக் காரணம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே முகாமில் வசிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 61 பேரில் 16 சிறுவர்கள் தடுத்து வைத்திருப்பது “குறிப்பாக கவலைக்குரியது” என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதோடு, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அவர்களை  பிரித்தானியாவிற்கு மாற்றுவதற்கான அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட G4S என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களால் பாதுகாக்கப்படும் வேலியிடப்பட்ட, கால்பந்து மைதானம் ஒன்றின் அரைவாசியை ஒத்த பகுதிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களுக்காக சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு எலி கடியாலும் பாதிக்கப்படுவதாகவும், தீவில் பரவலாக காணப்படும் எலிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் கூடாரங்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. “நாங்கள் மறக்கப்பட்டவர்களாகிவிட்டோம், எங்கள் வாழ்க்கைய முடித்துக்கொள்வது குறித்து எங்களில் அனேகமானவர்கள் கருதுகின்றோம்.” என பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டியாகோ கார்சியாவின் நிலைமை “இங்கு வாழ்வது நரகத்தில் வாழ்வது போன்றது” என புகலிடக் கோரிக்கையாளரான தாய் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடும் குறித்த அறிக்கை, சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், காவலுக்கு இருக்கும் நாய் வேலிக்கு வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீவு இந்தியப் பெருங்கடல் தீவின் ஒரு பகுதி என பிரித்தானியா வலியுறுத்துகிறது. இது லண்டனால் நிர்வகிக்கப்படுகிறது, எனினும் அரசியலமைப்பு ரீதியாக பிரித்தானியாவில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தீவு மொரிஷியஸின் ஒரு பகுதி என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தெரிவிக்கின்றது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழுவினால் பிரதேசத்தின் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், தீவில் அவர்கள் நடத்தப்படுவது சட்டவிரோதமான தடுப்புக்காவலாகும் என வெளிப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image