தேர்தல் கடமைகளுக்காக 80 ஆயிரம் படையினர், பாடசாலைகளுக்கும் விடுமுறை!
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ், முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், விசேட அதிரடிப்படையினர் என 80 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பிரதான பாதுகாப்பு தேர்தல் நடவடிக்கை அலுவலகத்திற்கு மேலதிகமாக, 9 மாகாணங்களுக்கும் 9 செயற்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் அவரவர் பணிக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த அதிகபட்ச பலத்தை பயன்படுத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களின் மூலம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏற்படக் பாதிப்புக்களை தணிப்பதற்காக இடர்காப்பு முகாமைத்துவ நிலையமும், தேர்தல் ஆணைக்குழுவும் கூட்டு திட்டமொன்றை அமுலாக்க தயாராகின்றன.
இந்த விசேட வேலைத்திட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு, இடர்காப்பு முகாமைத்துவ நிலையம், முப்படைகள், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து விசேட தேர்தல் கூட்டு இடர்காப்பு முகாமைத்துவ அலகொன்று ஸ்தாபிக்கப்படும்.
இந்த அலகு இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் 22ம் திகதி வரை இயங்கவுள்ளது.
வாக்களிப்பு நடைபெறும் சந்தர்ப்பத்தில் ஏதேனும் இடர்நிலை ஏற்பட்டால் விசேட அலகைத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.
விசேட தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும். இதைத் தவிர 0113-66-80-32, 0113-66-80-87, 0113-66-80-25, 0113-66-80-26, 0113-66-81-19 ஆகிய இலக்கங்களையும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிவிக்க முடியும். மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் துரித நடவடிக்கைகளை எடுக்கும்.