தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் விசேட ஒலிபரப்பு தேசிய வானொலியில்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அதன் காரணமாக இந்த வருடமும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் விசேட ஒலிபரப்பை மேற்கொள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தயாராகவுள்ளது.
21ஆம் திகதி இரவு 10.30க்கு தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் விசேட நிகழ்ச்சி ஆரம்பமாகும். சிட்டி எஃப்.எம் மற்றும் யாழ் சேவை மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன் பின்னர் எந்த அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்காக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் இறுதி பேரணிகள் தொடர்பான தகவல்களை இன்று காலை மற்றும் நண்பகல் 12 மணி செய்தி ஒலிபரப்புகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதற்குப் பிறகு எந்த ஊடகத்திற்கும் அதற்கான வாய்ப்பு இல்லை. விதிமுறைகளை மீறும் ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் திகதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
குறித்த காலப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாளை அந்தந்த வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுச்செல்லப்படவுள்ளன. இம்முறை வாக்குச் சீட்டின் அளவு நீளமாக இருப்பதால் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.