Home » நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்க வேண்டும்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்க வேண்டும்

Source

மும்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்றப் பிரதிகளுக்கும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் வெள்ளிக்கிழமை (19) அன்று இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இது தொடர்பான வேண்டுகோள் கடிதங்கள் அவர்களது அலுவலகங்களில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் முன்வைப்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.

அதே நேரம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கெதிராக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் திங்கட்கிழமை (22) காலை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் போராட்டம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதுடன், தாங்களும் அப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்திற்கு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதுடன் மாவட்ட மக்களின் எதிர் நிலைப்பாடான கருத்துக்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு அவர்களே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகம் சார்பாகத் தங்களுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கை யாதெனில். இலங்கை அரசானது இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்ற செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றிக்கொண்டே வருகின்றன.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கூறலாம். அதேபோன்று இவ்வாறான சட்டங்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இல்லாது செய்வதற்க்குப் பயன்படுத்தப்படுகின்றமை யாவரும் அறிந்த யதார்த்தமாகும். அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது இவ்வாறே காணப்படுகின்றது.

குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக நாம் கருத்தில் கொள்வது யாதெனில் எதிர்காலங்களில் சுதந்திரமாகத் தகவல்களை அணுகுவதற்கும். கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இச்சட்டம் செயல்படும் என்பதில் எவ்வி மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆகையால் சிவில் சமூகமாக மட்டக்களப்பு மாவட்டத்தி பிரதிநிதி என்ற வகையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது எதிர்வரும் 22,23.01.2024 திகதிகளில் இலங்கைப் நாடாளுமன்ற விவாதத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் இன்நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட வரைபைத் தாங்கள் எதிர்ப்பதோடு, சிறுபான்மைச் சமூகத்தினுடைய பார்வையினையும் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றோம்.

இத்தருணத்தில் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறிப்பாக சிறுபாண்மைச் சமூகங்களி பிரதிநிதி என்ற வகையில் எங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது தங்களது அடிப்படை கடமை என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image