பங்களாதேஷில் அரசியல் நெருக்கடி தீவிரம்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனா பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு வன்முறைகள் பாரிய அளவில் அதிகரித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இடைக்கால அரசாங்கத்தினால் சட்டத்தையும், ஒழுங்கையும் உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் அரசாங்கத்தின் ஆதரவாளர்களை இலக்குவைத்து பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
கொள்ளை, தீவைத்தல் போன்ற சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. சிறுபான்மை மக்களின் வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
பங்களாதேஷின் 27 மாவட்டங்களில் பாரிய அளவில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. பல்வேறு குடும்பங்கள் பாதுகாப்பு கருதி, சொந்த இடங்களிலிருந்து வெளியேறி வருகின்றன.
வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பொலிஸார் மீதும், இராணுவத்திற்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
பல்வேறு பொலிஸ் நிலையங்களும் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்திருக்கின்றன. பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை கவலை அளிப்பதாக சர்வதேச நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
மாற்றுக் கொள்கை சார்ந்தவர்களையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்திடம் சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
பங்களாதேஷின் பல்வேறு இடங்களிலும் தற்சமயம் 15 மணித்தியால மின்வெட்டு அமுலாகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.
அரச ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஷேக் ஹஸீனாவின் ஆட்சியில் பங்களாதேஷின் வெளிநாட்டு ஒதுக்கம் 500 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
பங்களாதேஷ் தெற்காசியாவில் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாகவும் கருதப்பட்டது. ஆனால், பங்களாதேஷின் தற்போதைய இடைக்கால அரச தலைவர்களின் செயற்பாடுகளினால் அங்கு வங்குரோத்து நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்திருப்பதாக புளும்பர்க் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதனால், இலங்கையின் டொலர் பிணை முறிகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுமாயின், இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படலாம் என்றும் புளும்பர்க் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.