Home » பல வருடங்களின் பின்னர் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணியில் கண்ணிவெடி

பல வருடங்களின் பின்னர் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணியில் கண்ணிவெடி

Source

பல வருடங்களாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த தமிழர்களுக்குச் சொந்தமான இருநூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் காணி உரிமையாளர்கள் அதற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியே ஜனாதிபதியின் வடக்குப் பிரதிநிதி இந்தத் தடையை விதித்துள்ளார்.

மார்ச் 22ஆம் திகதி இராணுவத்தினால், தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணியில் 55,000 சதுர அடி பரப்பளவில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக மே 30ஆம் திகதி முதல் ஜூன் 10ஆம் திகதி வரை வடமாகாண ஆளுநர் அலுவலகம் முழு காணிக்குள் நுழைய பொது மக்களுக்கு தடை விதித்துள்ளது.

காணி விடுவிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களின் பின்னர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் மே 7ஆம் திகதி பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து, காணிகளுக்குள் செல்லும் வகையில் பாதைகளை திறக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.

காணிகள் விடுவிக்கப்படும்போது, கண்ணிவெடிகள் அற்ற வலயமாக அந்த பிரதேசத்தை பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியிருந்தார்களா? என்பதை வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவிக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் பூநகரி மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

காணி விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தெல்லிப்பளை, ஒட்டகப்புலம் காணிகளின் தொழில்நுட்ப பரிசோதனை ஏற்கனவே மாவட்ட செயலகத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உறுமய திட்டத்தின் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியுடன் இணைந்ததாக பலாலி விமானப்படை தளத்தில் மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில், வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை ஒட்டகப்புலம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 234.8 ஏக்கர் காணியை இராணுவத்திடம் இருந்து விடுவித்திருந்தார்.

யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை அன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.

இதற்கமைய  வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டதோடு, குறித்த காணி அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்துடன் இணைந்து விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), பலாலி வடக்கு (ஜே/254), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி தெற்கு (ஜே/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 234.8 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இங்கு வசிக்கும் 327 குடும்பங்கள் தமது காணி உரிமையை கோரி பதிவு செய்துள்ளதாகவும் அவர்களில் 171 குடும்பங்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் வடமாகாண சபையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக கண்ணிவெடி தின தேசிய நிகழ்வு

2028இல் இலங்கை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக மாறுமென, கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற உலக உலக கண்ணிவெடி தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 23 சதுர கிலோமீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆனால் அந்த பகுதிகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை.

கண்ணிவெடிகள் இருந்த முழு நிலத்திலிருந்து 1340.87 கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்ததாகவும், எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் குறிப்பிட்டார். 

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image