எமது விடுதலைப் போராட்டமென்பது வெறுமனே மூன்று மணிநேர திரைக்குள் உட்புகுத்திவிட முடியாது. அந்த உன்னதமான உண்மையை சினிமாத்தனமாக்க வேண்டாம் என தமிழ் திரையுலகினரை தன்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.
கெப்டன் மில்லர் என்ற பெயரில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்படுகின்ற திரைப்படம் குறித்து தமது கண்டனத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் விதமான அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது இந்தியாவின் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவருக்குமான ஒரு செய்தி கடந்த காலங்களில் எமது தேசியத் தலைவரின் வரலாறு என்று சொல்லி மேதகு என்ற திரைப்டத்தினை பாகம் ஒன்று, இரண்டு என வெளியிட்டிருந்தீர்கள். அந்த விடயம் எங்களுக்கு மிகவும் வேதனையளித்ததாகவே இருந்தது. அதே விதத்தில் தற்போது தனுஷ் அவர்கள் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற பெயருடன் எமது கரும்புலித் தளபதிகளில் ஒருவரான மில்லர் அவர்களின் பெயரில் ஒரு திரைப்படத்திற்கான பூசை இடம்பெற்றுள்ளது.
நாங்கள் எமது இனவிடுதலைக்காகப் போராடிய பேராளிகள் என்ற ரீதியில் எமது விடுதலைப் பேராட்டத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்திருக்கின்றோம். இலட்சக்கணக்கான மக்களை இழந்து தற்போது எமது ஆயுதம் மௌனிக்கப்பட்ட நிலையில் எமது பேராட்டம் இன்னும் முடிவு பெறவில்லை. இவ்வாறான வேதனை மிகுந்த வாழ்க்கையில் எமது மக்கள் இருக்கும் போது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இந்திய சினிமாத்துறையினர் இவ்;வாறான திரைப்படங்களைத் தயாரிப்பதென்பது இன்னும் வேதனை தரும் விடயமாகவே இருக்கின்றது.
எமது தமிழரின் பூர்வீக வரலாறுகளை திரைப்படம் மூலம் காண்பித்து விடலாம். அதன் மூலம் உழைத்தும் விடலாம். ஆனால் ஈழத்துப் போராட்ட வரலாறு அவ்வாறால்ல, எங்களது முப்பது வருட ஆயுதப் போராட்டம் இன்றும் எமது மக்கள் மத்தியிலும், போராளிகள் மத்தியிலும் ஆறாத ரணமாக இருந்து கொண்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவருடன் தோளோடு தோள் நின்று போராடிய போராளிகளின் உடல்களில் இன்னும் போராட்டத்தின் வடுக்கள் இருக்கின்றன. இன்றும் எத்தனயோ போராளிகள் மாற்றுத் திறனாளிகளாக, பெண்தலைமை தாங்கும் குடும்பத்தினராக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறாக எமது போராட்ட வரலாறுகளை வைத்து திரைப்படமெடுக்க விரும்புகின்ற திரைத்துறையினர் எமது அந்த மக்களுக்கான பொருளாதார மீட்சி தொடர்பில் எதுவித முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதில்லை. அவ்வாறில்லாமல் எமது வராலாற்றை திரிபுபடுத்தும் விதத்தில் கற்பனைக் காட்சிகள் பலவற்றை உட்புகுத்தி படமாக்குகின்றீர்கள்.
முதல் கரும்புலி மாவீரர் மில்லர் அண்ணனின் பெயரை வைத்து படமாக்க முனைகின்றீர்கள். நாங்கள் நடிகர்கள் அல்ல எமது மக்களுக்காக உண்மையாக ஆயுதமேந்தி யுத்தம் செய்தவர்கள். எந்த நேரமும் எமது உயிர் போகும் என்ற நிலையிலேயே நாங்கள் போராடியவர்கள். எனவே திரைத்துறையினர் இவ்வாறான செயல்களைச் செய்யும் போது எமக்கு மனவேதனையையே அளிக்கின்றது.
எமது மில்லரின் தியாகம் சொல்லிப் புரிகின்ற விடயம் அல்ல. அதனை ஒரு படத்தில் கூறிவிட முடியாது. எமது மாவீரர்கள், கரும்புலிகள், போராளிகளின் வரலாறு அவ்வாறான வரலாறு. எமது விடுதலைப் போராட்டமென்பது வெறுமனே மூன்று மணிநேர திரைக்குள் உட்புகுத்திவிட முடியாது. தமிழ்சினிமாத் துறை போராட்ட வரலாறுகளை படமாக்கி வரலாறுகளை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படுவனவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவை வெறுமனே பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே எடுக்கப்படுவதாகவே அனைவர் மத்தியில் பார்வை இருக்கின்றது.
எமது போராட்ட வரலாறுகளையோ, போராட்ட வரலாறுகளுடன் தொடர்பு பட்ட மாவீரர்களின் வரலாறுகளையோ திரைப்படமாக எடுப்பதானால் அதன் வலியைச் சுமந்த, வலியை உணர்ந்த வரலாற்றை முழுமையாக அறிந்தவர்களாலேயே முடியும். ஆனால் அப்படியானவர்கள் ஈழத் திரையுலகிலோ, தமிழ்த் திரையுலகிலோ இல்லை. அப்படி இருக்க எமது வரலாற்றைப் படமாக எடுப்பதாகக் கூறி திரிபுபடுத்தலும், வரலாற்றை கொச்சைப் படுத்தும் விதமாகவுமே திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. முழுமையான உண்மைத் தன்மையுடன் எமது பொராட்ட வரலாற்றுத் திரைப்படங்கள் வந்ததே இல்லை. இத்தகு விடயங்களுக்கு நாங்கள் இனியொருபோதும் இடமளிக்க முடியாது.
அந்த உன்னதமான உண்மையை சினிமாத்தனமாக்க வேண்டாம் என தமிழ் திரையுலகினரை தன்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். எமது வலிகள் நன்கறிந்த பல படைப்பாளிகள் இருக்கின்றீர்கள். அனைவருக்கும் எங்கள் ஆதங்கம் புரியும் என நினைக்கின்றேன். எங்கள் தன்மையான வேண்டுகோள் புரிந்து கொள்ளப்படவில்லையானால் அது வன்மையான கண்டனமாகவும் மாறும். இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.
அண்மையில் பல திரைப்படங்கள் எமது வரலாற்றை மையப்படுத்தி வந்திருக்கின்றன. அவற்றில் எமது வரலாறுகள் முழுமையாக உண்மையாகச் சொல்லப்பட்டது இல்லை. வரலாற்று உண்மையை வேறு விதமாகச் சொல்வதற்கு எதற்கு அந்த வரலாற்றை தொட வேண்டும். சினிமாவில் காட்டுவதற்குப் பல விடயங்கள் இருக்கின்றன. அதனை விடுத்து போராட்ட வரலாற்றை எடுத்து இன்னும் இன்னும் அல்லலுற்று காயமுற்றிருக்கும் எம்மினத்தை மீண்டும் மீண்டும் ரணமாக்க வேண்டாம்.
எனவே எமது போராட்டத்தை மையப்படுத்தி நடிகர் தனுஷ் அவர்கள் இது இரண்டாவது படத்தில் நடிக்கின்றார் என நினைக்கின்றேன். எமது மக்களின் மனோநிலையை அவரும், திரைப்படத் துறையினரும் உணர்ந்து இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
[embedded content]