போலி உறுதிமொழிகள் ஊடாக நாட்டை சீர்குலைக்க முடியாது – ஜனாதிபதி
நாட்டின் அரசியல் கட்சி மேடைகளில் போலி உறுதிமொழிகளை வழங்கி மக்களை குழப்பியமையினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறினார். போலி உறுதிமொழிகளுக்குள் சிக்கி நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
குருநாகலில் இடம்பெற்ற இலங்கை மக்கள் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன இதனை ஒழுங்கு செய்திருந்தார்.
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால் இது மேலும் இலகுவானதாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே தாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மேம்படுத்த புதிய ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டு மக்களின் எதிர்கால நலன்கருதியே தாம் கட்சி அரசியலை மறந்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.