மட்டக்களப்பில் 5 வயது மாணவி உலக சாதனை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியைச் சேர்ந்த ஐந்து வயதும் பத்து மாதங்களுமான பாடசாலை மாணவி காவ்யஸ்ரீ உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளான காவ்யஸ்ரீ மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்தார்.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது தனக்கு வழங்கப்பட்டிருந்த 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கான சரியான பதிலை 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் எழுதியும் மனக்கணக்கு விடைகளையும் மிக விரைவாக சொல்லி, சோழன் உலக சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.
சோழன் உலக சாதனை படைத்த சிறுமிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவைகள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்முனை வடக்கு பிரதேச செயலர் வ.வாசுதேவன் பங்கு கொண்ட அதேவேளை, கதிரவன் த.இன்பராசா நிகழ்வைத் தலைமேயேற்று நடத்தினார்.