Home » மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது?

மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது?

Source

இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி.

ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக கொழும்பு அவிசாவளை முதல் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா வரை தேயிலை மலைகளில் நாள் முழுக்க பாடு படும் எங்க குல பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வர போகிறது? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். 

ஈரான் நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மும்மடங்கு அதிகரித்தமையால், அந்நாட்டிடம் இருந்து  இலங்கை கடனுக்கு வாங்கிய பெட்ரோலுக்காக செலுத்த வேண்டிய தொகையில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமை குறித்து மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது;

இது ஈரானுக்கு மட்டும் அல்ல. உலகின் பல நாடுகளிடம் இருந்து நாம் வாங்கிய கடன்களுக்கும் பொருந்தும். பல காலமாகவே பொருந்தும். 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது, இலங்கை ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த படியாக அதிகம் அந்நிய செலாவணி, அதுவும் ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பை கொண்ட நாடாக இருந்தது. இது பற்றி ஜனாதிபதி மிக பெருமையாக நாடாளுமன்றத்தில் வந்து சொன்னார். அந்த ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பு முழுக்க முழுக்க எங்கள் உழைப்பால் பெறப்பட்டது. இது உண்மை.

இது எப்படி? அன்று இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை தவிர, பெயருக்கு கூட வேறு ஏற்றுமதி தொழிற்துறைகள் இருக்கவில்லை. ஆகவே அன்று முதல் இன்றுவரை கொழும்பு அவிசாவளை தொடக்கம் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா மலைகளில் நாள் முழுக்க எங்கள் பெண்கள்தான்  பாடுபடுகிறார்கள்.

1948ம் முதல் நமது மக்களின் உழைப்பை கொண்டு பெற்ற அந்நிய செலாவணி இருப்பை வைத்து தான், மாறி மாறி வந்த இலங்கை அரசு தலைவர்கள் தாராளமாக ஆட்டம் போட்டார்கள். தமது வாக்காள மக்களுக்கு கையை வீசி, இலவசமாக அள்ளி, அள்ளி வழங்கி வாக்குகளை பெற்றார்கள். அந்த அரசுகளில் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்த பிற்போக்கு பேர்வழிகளும், நமது மக்களை விற்று, சாப்பிட்டு, ஆட்டம் போட்டார்கள்.

இனியாவது மலையக பிற்போக்கு அரசியல்வாதிகள், கோமாளி கூத்துகளையும், வாய் சவடால்களை நிறுத்தி விட்டு, இலங்கை சரித்திரத்தை, பொருளாதார வரலாறுகளை கற்றறிந்து, எமது மக்களின் உரிமைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும்.

இந்நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி எவருடனும் கரம் கோர்த்து  செயல் பட தயார். இன்று நாம் முற்போக்கு கூட்டணியினராக அரசுக்கு எடுத்து உரைக்கிறோம். இனியும் எங்கள் மக்களை ஏய்த்து பிழைக்க முடியாது. எங்கள் உழைப்பால் வரும் வாழ்வு உங்களுக்கு மட்டும்? சாவு மட்டும் எங்களுக்கா? நான் ஒரு இலங்கையன், இதனால், நான் எப்போதும் பெருமை அடைகிறேன். இது பல வருடங்களாக நான் உரக்க கூறி வரும் எனது கொள்கை. ஆனால், எனது மக்களை அடகு வைத்து, அதன் மூலம் எனக்கு நாட்டு பற்று வேண்டாம் என்பதும் எனது கொள்கை என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image