மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பில் பிரதமர் கோரிக்கை.
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.
மியன்மார் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இணைய குற்ற மையங்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் ஹரினி நன்றி தெரிவித்தார். குறித்த மையங்களில் எஞ்சியுள்ள 40 இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.