மீண்டும் இக்கட்டான காலம் வந்தால் சஜித், அனுரகுமார தப்பி ஓடுவார்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளவத்தை – அமரபுர மகா நிகாய தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அந்த பிரிவின் தலைவரான சங்கைக்குரிய கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
அங்கு ஜனாதிபதிக்கு ஆசி கோரும் வகையில் பிரீத் பாராயணம் செய்யப்பட்டது. அதன் பின்னர், ஜனாதிபதி மகா சங்கரத்தினருடன் ஒரு குறுகிய சந்திப்பை மேற்கொண்டதுடன், தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.
இதனிடையே, நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இயலும் ஸ்ரீலங்கா பேரணி நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மீண்டும் ஒரு இக்கட்டான காலம் வந்தால் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் தப்பி ஓடுவார்கள் என குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியல் தளம் நாட்டை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வெளியில் உள்ள அனைவரும் மக்கள் இறந்தாலும் அரசியல் இலாபங்களை மட்டுமே பெற விரும்புகிறார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அன்று மக்களைப் பற்றி சிந்திக்காத தலைவர்கள் இன்று தங்களை ஜனாதிபதியாக நியமிக்குமாறு மக்களிடம் கேட்கின்றனர்.
மக்கள் சிரமப்படும் போது மக்களுடன் இருந்த தலைவரை அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தலைவர்கள் தங்கள் மேடைகளில் பொருட்களின் விலையை குறைப்பதாகவும், வரிச்சலுகை தருவதாகவும் வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
ஆனால் அதற்கு எப்படி பணம் ஈட்டுவது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவதன் மூலம் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த், கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி திரண்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தேசியக் கொள்கையை தயாரித்து சட்டமாக்கும் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.