முன்மாதிரியான அரசியல் பயன்பாடு நாட்டுக்குத் தேவை
முன்மாதிரியான அரசியல் பயன்பாட்டை இலங்கை மக்கள் கோரி நிற்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றளவில் அரசியல் களம் வேகமாக சூடுபிடித்து வருகிறது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு எதிராக ஆட்சியில் உள்ள குழுக்கள் சேறு பூசியும் போலித் தகவல்களை பரப்பியும் வருவதாக அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரசியல் மேடைகளில் மதம் பற்றி முழக்கத் தேவையில்லை. ஆனால் ஆட்சியிலுள்ள குழுக்கள் மீண்டும் மீண்டும் மதத்தை பேசி பிரச்சனையை ஏற்படுத்த முனைவதாக அவர் குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றிய போது இந்த விடயங்களை திசாநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி தொடக்கக் கட்டத்திலேயே புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து படிப்படியாக நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நோக்கி நகரப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கூறினார்.