ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டது.
ரணிலுடன் நாட்டை வெற்றிபெறச் செய்யும் ஐந்து ஆண்டுகள் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஐந்து அம்சங்களைக் கொண்டு இந்த கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
www.ranil2024.lk என்ற இணையதளத்தில் இது தொடர்பான விபரங்களை பார்வையிட முடியும். பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய யோசனைகள் இதில் அடங்குவதாக நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி பொருளாதாரத்தை சீர்குலைக்கத் தாம் தயார் இல்லை என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
தெளிவான பொருளாதாரக் கொள்கையொன்று சர்வதேச நாணய நிதியின் கடன் வழங்கிய நாடுகள் என்பனவற்றின் ஒத்துழைப்போடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
விவசாய நவீனமயப்படுத்தல், வலுசக்தி உற்பத்தி, டிஜிட்டல்மயப்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களும் இதில் அடங்கும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டமும் இதில் அடங்கும். தொழில்நுட்பப் பயிற்சிக்காக இளைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவிருக்கிறது.
அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவை வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 24 சதவீதத்தால் அதிகரிக்கப்படவிருக்கிறது. வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவின் மூலம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 55 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கவிருக்கிறது.
40 வயதை விட குறைந்த அரச ஊழியர்களுக்கு பாடநெறிகளை தொடர்வதற்கென சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படவிருக்கிறது.
லெப்டொம், டெம், ஸ்மார்ட் தொலைபேசி என்பனவற்றை அரச ஊழியர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளும் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.