வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது – ஜனாதிபதி
வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரிகள் குறைக்கப்படும் என சஜித் பிரேமதாஸவும், அனுரகுமார திஸாநாயக்கவும் அறிவித்துள்ளனர்.
ஆனால், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இலக்கின்படி, வருமானம் அதிகரிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பண்டாரவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் உற்பத்திகளை அதிகரித்து, சலுகைகளை வழங்கி வருவதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, லைன் வீடுகளை, தோட்டங்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வாக்குறுதி வழங்கியதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அடுத்த வருடம் மேலும் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயத்தை நவீனமயமாக்குதல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.