வளிமண்டல திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை அமுலில்
வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று, அடைமழை, கடல் கொந்தளிப்பு பற்றிய சிவப்பு முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் இன்று பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும்.
வங்காள விரிகுடாவில் கிழக்கையும் அந்தமான் தீவின் வடக்கையும் உள்ளடக்கிய பகுதியில் தாழமுக்க வலயமொன்று உருவாகியுள்ளது.
இந்த வலயம் மேற்கு திசை சார்ந்து வடமேல் திசையில் நகர்கிறது. இன்று இது தாழமுக்கமாக உருவாகலாம். இந்தத் தாழமுக்க வலயம் நாளை கிழக்கு – மத்திய வங்காள விரிகுடாவில் சூறாவளியாக பரிணமிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தாழமுக்க வலயம் வடமேல் திசை நோக்கி நகர்ந்து வியாழக்கிழமை அதிகாலை அளவில் வங்காள விரிகுடாவின் வடமேல் திசையில் இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநில கரையோரம் நோக்கி நகரலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த கடல் பிரதேசத்தில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசலாம். இதனால் கடல்கொந்தளிப்பானதாக மாறக்கூடும்.
வடக்கில் ஆறாம், 22ம் அகலாங்குகளுக்கு இடையிலும். கிழக்கில் 85ம், 98ம் நெட்டாங்குகளுக்கு இடையிலான கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடல் பரப்பில் தொழில் செய்வோர் உடனடியாக கரை திரும்ப வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.