“பலாலி விமான நிலையத்தைச் சூழ உள்ள பகுதிகளில் விமான ஓடுதள விஸ்தரிப்புக்காக சில காணிகளைக் கையகப்படுத்தவுள்ளோம். அதனைச் சூழ சிறு தானிய பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விமானப்படையினர் அனுமதி கோரியுள்ளனர். ஜனாதிபதியின் யாழ். வருகையின்போது அதற்கான அனுமதியை வழங்குவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.”
இவ்வாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்த காலத்தில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக முப்படை மற்றும் பொலிஸாரால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. மேலும் அரச திணைக்களங்களான வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்களங்களின் கட்டுப்பாட்டின் கீழ் அதிகளவான காணிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு 2013ஆம் ஆண்டில் இருந்து மக்களிடம் காணிகளைக் கையளிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவந்தது. எனினும், நாட்டில் இன்னமும் விடுவிக்கப்படாமல் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகள் முப்படை மற்றும் பொலிஸார் வசம் உள்ளன. எனினும், இந்த 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் தேவையான காணிகளாகவும் அதேபோல் மக்களுக்கும் தேவையானதாகவும் உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாட்டைப் பொறுப்பெடுத்தபோது நாடு வங்குரோத்து நிலையில் இருந்தது. அதனால் அரசு முதலில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றி அக்கறை செலுத்தியது. அதன் பின்னர்தான் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தியது.
காணிகளை விடுவிப்பது தொடர்பில் முப்படைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவை குறித்த காலவரைக்குள் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். அந்தக் குழுவின் ஆரம்பகட்ட அறிக்கை கிடைத்துள்ளது. அதனை ஆராய்ந்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
மேலும் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் தேவையான சில காணிகள் தொடர்ந்தும் முப்படைகளின் கட்டுப்பாட்டிலே இருக்கும். அந்தக் காணிகள் மக்களுக்கும் தேவையானது என எமக்குத் தெரியும். எனவே, தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளுக்குரிய இழப்பீடுகளை வழங்கவும் தயாராகவுள்ளோம்.
கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை தகவல் தொழிநுட்பக் கற்கைகள் தனியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளோம். அப் பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழகத்தோடு இணைந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
மேலும் ஜனாதிபதி மாளிகை தவிர்ந்த அனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கவுள்ளோம். குறித்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு மேலதிகமாக காணிகள் தேவைப்படின் அதனைச் சூழ உள்ள காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறித்த தனியார் பல்கலைக்கழகத்தினர் காணிகளை விலைக்கு வாங்க முடியும்.
ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது முப்படைகள் வசம் உள்ள மக்களின் காணிகளைப் பார்வையிடவுள்ளார். மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் எவ்வாறு பயண்படுத்துகின்றார்கள் எனவும் ஆராயவுள்ளார்.
பலாலி விமான நிலையத்தைச் சூழ உள்ள பகுதிகளில் விமான ஓடுதள விஸ்தரிப்புக்காகச் சில காணிகளைக் கையகப்படுத்தவுள்ளோம். அதனைச் சூழ சிறு தானிய பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விமானப் படையினர் அனுமதி கோரியுள்ளனர். ஜனாதிபதியின் யாழ். வருகையின்போது அதற்கான அனுமதியை வழங்குவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் வீடுகளைத் தற்போது மீளக் கட்டிக்கொடுப்பது தொடர்பான பிரச்சினையும் நிலவி வருகின்றது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடும் எமக்கு உண்டு. அப்பிரதேச மக்களின் பொருளாதார நிலை தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். எனவேதான் இப் பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்திய இழுவைப் படகுகளால் வடக்கு மீனவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர் என்று கடற்றொழில் அமைச்சர் எனக்குத் தெரிவித்திருந்தார். கடற்படையினர் தமக்கு வழங்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றனர். எனவே, கடற்படையை வைத்து இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இதனை இராஜதந்திர ரீதியாகவே அணுக வேண்டும்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்திய – இலங்கை உயர்மட்டப் பேச்சுகள் நீண்டகாலமாக இழுபறியில் உள்ளன. எனவே, மிகுந்த அக்கறையுடன் அந்தப் பேச்சை மீண்டும் தொடர வேண்டும்.
இழுவைமடி மீன்பிடி முறையால் இலங்கைக்கும், இலங்கைக் கடற்பரப்புக்கும் மிகுந்த பாதிப்பு உள்ளது. இழுவைமடி மீன்பிடி முறைமை என்பது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத மீன்பிடி முறைமையாகும். இதனால் கடலின் வளம் முழுமையாகச் சுரண்டப்படுகின்றது. மேலும், எமது மீனவர்களின் வலைகள், சொத்துக்கள் அழிவடைகின்றன. எனவே, இது தொடர்பில் இராஜதந்திர மட்டக் கலந்துரையாடல் மூலம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.