உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது. எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
விஷ்ணு பகவானினால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு, தனக்கு ஞான ஔி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டுமென நரகாசுரன் விஷ்ணு பகவானிடத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.
அதனை நினைவுகூறும் வகையில், அனைவரது மனங்களிலும் ஔி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனேயே இந்து பக்தர்கள் விளக்கேற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஔி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.
நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திப்பதோடு அனைவர் வாழ்விலும், இன்பமும் நலமும் உண்டாக பிரார்த்திக்கிறேன்.
இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ரணில் விக்ரமசிங்க – ஜனாதிபதி