அமெரிக்க ஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு.
தனக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் இடையிலான கலந்துரையாடலில், ரஷ்யாவின் உள்நாட்டு இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்த உக்ரேனுக்கு அனுமதி அளிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer ) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மற்றும் அமெரிக்க தலைவர்கள் வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடினர். அதன்போது தானும், அமெரிக்க ஜனாதிபதியும் நீண்ட நேர ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், உக்ரேனைத் தவிர, மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது நாட்டின் இலக்குகள் மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.