அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிடியாணை.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தான் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இன்றைய விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தனது கட்சிக்காரர் இன்று செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
மேல்முறையீட்டை அடுத்து, வழக்கில் ஆஜராகாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் எவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் வாக்கு மூலங்களை வழங்கப் போகிறார் என உயர் நீதிமன்ற நீதிபதி இதன்போது கேள்வி எழுப்பினார்.
பிரதிவாதியின் வழக்கிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.