Home » அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை, சர்வதேச சமூகத்திடம் நாம் ஒப்படைக்க போவதில்லை! – மனோ

அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை, சர்வதேச சமூகத்திடம் நாம் ஒப்படைக்க போவதில்லை! – மனோ

Source

சர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, அவற்றுக்காக பேரம் பேசுவது ஆகியவற்றை தேர்தல்களில் எமது மக்கள் வழங்கும் மக்கள் ஆணையினால் கிடைக்கும் எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராடங்களையும் முன்னெடுத்து பெற்று கொள்ளும்.

நாம் பெறுகின்ற இந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென் மேலும் செழுமை படுத்த அவசியமான அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். எமது இந்த நிலைப்பாடு, எமக்கு மட்டும் சாதகமானது அல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் “தொல்லை இல்லாமல்” சாதகமானது  என நான் மிக தெளிவாக நேற்று அமெரிக்க தூதர் ஜூலி சாங் இடம் தெரிவித்தேன். அதையே நேற்று முன் தினம்  இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரே இடமும் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

கடந்த சில தினங்களாக சர்வதேச சமூக பிரதிநிதிகளுடன் நடத்தி வரும்  சந்திப்புகள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

உலகம் இன்று மிக வேகமாக மாறி வருகிறது. உலக ஒழுங்கமைப்பு என்பது பலம் வாய்ந்த நாடுகளின் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க படுகிறது. எமது மக்களின் அரசியல் துன்பங்கள், துயரங்கள் பெரிய நாடுகளுக்கு பொருட்டாக தெரிவதில்லை. இலங்கை உட்பட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பாக உலக ஒழுங்கமைப்பு பலம் வாய்ந்த நாடுகளால் தமது நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க படுகின்றன.

இந்நிலையில் நாம் உலக நாடுகளை அணுகி எமது அரசியல் போராட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். இந்நாட்டு பிரதிநிதிகளும் இவற்றை பொறுமையாக கேட்கின்றார்களே தவிர எமக்காக அரசியல் போராட்டங்களை அவர்கள் முன்னெடுப்பது கிடையாது. உலக ஒழுங்கமைப்பு மிக வேகமாக இந்த நிலைலையை நோக்கி நகர்ந்து மாறி விட்டது.

ஆகவே, சர்வதேச சமூகத்திடம் எமது அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. ஆனால், அவர்கள் செய்ய கூடிய எம்மை நோக்கிய அவர்களின் பொறுப்புகள் சில உள்ளன. நாம் உள்நாட்டில் பெறுகின்ற அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென் மேலும் செழுமை படுத்தும், அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். அவற்றை எப்படி பெற வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, ஆகியவற்றை மக்கள் ஆணையுடனான எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களை முன்னெடுத்து பெற்று கொள்வோம். இதுவே எமக்கு சாத்தியமான கொள்கை ஆகும். அதற்கு உரிய அரசியல் பலத்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எமது மக்கள் வழங்கி உள்ளார்கள். எதிர்காலத்தில் மிக அதிகமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் ஒரு தூர பார்வையுடனேயே இதை கூறுகிறேன். எவ்வளவு அதிக வாக்குகள் எமக்கு கிடைகின்றனவோ,  அந்த அளவு எமது பலம் உயரும். எமது பலம், எந்த அளவு உயர்கின்றதோ, அந்த அளவு எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராடங்களையும் முன்னெடுத்து நாம் உரிமைகளை பெறுவோம்.

நாற்பது வருடங்களாக மலை நாட்டில், தென் இலங்கையில் குப்பை கொட்டிய பிற்போக்கு கும்பலை விட பல மடங்கு பணிகளை நாம் 2015-2019 வரையான நான்கே வருடங்களில் செய்து காட்டி உள்ளோம். எதிர்காலத்தில் மிக விரைவாக இன்னமும் பல காரியங்களை நாம் செய்ய உள்ளோம். மக்கள் பலமே எமக்கு வேண்டும். எம்மை எதிர்க்கும் உதிரிகளை தேர்தல்களில் தூக்கி வீசி, எமது பலத்தையும், ஆட்சியையும் நாம் நிலை நாட்டுவோம்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image