அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம்.
இலங்கை தற்சமயம் பல்வேறு துறைகளில் சீர்குலைந்திருப்பதாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீர்குலைந்த நாட்டை மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் மூலம் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற புதிய ஜனாதிபதியை பிரகடனம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
நாடு, கடந்த காலங்களில் பல்வேறு வகைகளிலும் சீர்குலைக்கப்பட்டது. நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் ஆணை முறையான விதத்தில் மீள உறுதிப்படுத்தப்படுவது அவசியமாகும்.
வன்முறைகள், மோதல்கள் இன்றி தேர்தலை நடத்த முடிந்தமை நாட்டுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.
இதனை நிரந்தரமான வெற்றியாக எவ்வாறு மாற்ற முடியும் என்பது பற்றி கவனம் செலுத்தவேண்டும் என்றும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மரபு ரீதியான முறைகளில் இருந்து நாட்டின் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும்.
நாட்டில் வாழும் இரண்டு கோடி 20 லட்சம் மக்களின் எதிர்பார்ப்புக்களை புதிய ஜனாதிபதி நிறைவேற்றுவார் என அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டார்.