அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரிக்க முடியும்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ், அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் அரச சேவைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் மாற்றியமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று அரசு ஊழியர்கள் பணவீக்கத்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துக் கட்டணம், குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இந்நிலையில் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, திரு. ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொதுச் சேவையை திறம்படச் செய்தல், முறையான பதவி உயர்வு முறைகளை ஏற்படுத்துதல், அரசு ஆட்சேர்ப்பில் அரசியல் தலையீடுகளைத் தவிர்த்தல், பரீட்சை முறைப்படி மட்டுமே ஆட்சேர்ப்பு செய்தல், அக்ரஹார காப்பீட்டு முறையின் பலன்களை அதிகரித்தல், ஓய்வூதியக் கொடுப்பனவு முறையினைத் திறம்படச் செய்தல், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல், வரி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை நீக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.