அறுகம்பை கடற்கரையில் சுற்றிவளைப்பு – பாதுகாப்புக்காக சோதனை சாவடிகள்
அறுகம்பை பிரதேசத்தில் ஹேட்டல்களில் தங்கி இருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக நேற்றுமுன்தினம் இரவு இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நீர்சறுக்கல் விளையாட்டு இடம்பெறும் முக்கிய பகுதியாக பொத்துவில் அறுகம்பை கடற்கரை திகழ்கிறது. இதனால் இங்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவர்கள் அறுகம்பைவில் உள்ள ஹோட்டல்களில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து செல்வார்கள். அறுகம்பைக்கு அதிகமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், இவர்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து தமது சுற்றுலாவை கழிப்பார்கள்.
இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்களை நடத்த இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் பிரகாரம் இவ்வாறு சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
அறுகம்பை கடற்கரை மற்றும் அதனை அண்டிய பகுதியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதுடன், முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.