இதுவரை சேற்று உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளுக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அதனை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்
சிறுபோகத்திற்குத் தேவையான TSP என்றழைக்கப்படும் சேற்று உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலவசமான முறையில் இந்த உரம் விநியோகிக்கப்படுகிறது. இந்த TSP உரத்தை இதுவரை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளுக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அதனை வழங்குமாறும் அமைச்சர் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இல்லாவிட்டால், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கமநல சேவை மத்திய நிலையங்களில் எஞ்சியிருக்கும் TSP உரத்தை பிரதான களஞ்சியங்களுக்கு தருவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அரசாங்கத்தின் TSP உட்பட ஏனைய உர விநியோக நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் மஹிந்த அமரவீர விசேட கவனம் செலுத்தியுள்ளார். லங்கா பேர்ட்டிலைஸர் நிறுவனம், கொலம்பு கொமர்ஷல் உர நிறுவனம் என்பன, TSP வகையைச் சேர்ந்த 36 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை நாடளாவிய ரீதியில் உள்ள கமநல மத்திய நிலையங்களுக்கு அனுப்பியுள்ளன. நாட்டில் இதுவரை 22 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான TSP உரம் இலவசமான முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.