Home » இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு – செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு – செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்

Source

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின்போது இந்திய மண்ணை நம்பி தஞ்சம் புகுந்த வடக்கு கிழக்கை சேர்ந்த கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

உலகில் வேறெங்கிலும் இதற்கு முன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அங்கிகாரம் பெற்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதனூடாக உலகின் எப்பகுதிக்கும் செல்லும் தகுதியை இந்தியவாழ் இலங்கை அகதிகள் இன்றுமுதல் பெற்றுக்கொள்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஈடிணையற்ற தமது ஒத்துழைப்புகளை வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதம மந்திரி செயலக அதிகாரிகள், வெளியுறவுத்துறைச் செயலக அதிகாரிகள், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுக செனவிரட்ன, சென்னைக்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்ற பவ வருடகாலமாக அவ்வப்போதைய அரசாங்கத்திடம் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை சாத்தியப்படாதிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் இவ் அகதிகளுக்கு அங்கிகாரம் கிடைத்திருப்பதானது சுமார் ஒரு இலட்சம் அகதிகளுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து நலன்புரித் திட்டங்களுக்குள் உள்வாங்கி அகதிமுகாம் என்ற சொல்லை மாற்றி மறுவாழ்வு நிலையம் என உருவாக்கிய தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இவ்விடத்தில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

மேலும் இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image