இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு முன்னேறுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் – ரணில்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியச் சங்கம் (Sri Lanka India Society) நேற்று(14) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஆகிய அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
மேலும், தென்னிந்தியாவிற்கு வசதியாக இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன்படி, தென்கிழக்காசியா மற்றும் வங்காள விரிகுடாவின் பிராந்தியங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் திருகோணமலையின் மீள் அபிவிருத்தி தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்துகையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவுக்கு அடிக்கடி வரும் இலங்கையர்களும் உள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதைப் போன்றே இலங்கையில் இருந்து திருப்பதி, அயோத்தி, குருவாயூர் போன்ற இடங்களுக்கு இலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக செல்கின்றனர்.
நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்து சமுத்திரம் வளர்ச்சி அடையும் போது நமது நாடும் வளர்ச்சி அடையும். நாம் பொருளாதார ஒருங்கிணைப்பை நோக்கி நகர்ந்து வருகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தபோது பின்பற்றியதை நாம் இங்கு செய்யக்கூடாது. அதிலிருந்து வெளியேறுவதாக பின்னர் அவர்கள் முடிவு செய்தனர். மேலும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளவது குறித்து இன்னும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த விடயம் நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. இருப்பினும், நமக்கு இருக்கும் வாய்ப்புகளை நாம் உணர வேண்டும். இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு முன்னேறுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இது மிகவும் எளிதான செயல் எனலாம்.
பெங்களூரில் இருந்து ஒருவர் ராஜஸ்தானுக்கு செல்வதை விட எளிதாக விடுமுறைக்கு இலங்கைக்கு வரலாம். ராஜஸ்தானை அடைய இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் இலங்கையை அடைய ஒரு மணி நேரம் மட்டுமே செல்லும்.
கைத்தொழில் நடவடிக்கைகளைப் போன்றே இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் விநியோகச் சங்கிலிகளை நிறுவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்து சமுத்திரம் தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா போன்ற ஏனைய நாடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
அப்போது இந்து சமுத்திர வலயம் பொருளாதார மையமாக மாறும். அடுத்த 50, 60 ஆண்டுகளில், ஆபிரிக்க வலயமும் வளர்ச்சியடைவதால் அந்த மாற்றம் நிகழும். எனவே இந்தப் பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் உறவுகள் உள்ளன. இந்த அனைத்து துறைகளிலும் நமது இரு நாடுகளும் நெருக்கமாக உள்ளன. எனவே நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேற வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும்.
எனவே, எமது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடந்த வருடத்தில் முன்னெடுத்த வேலைத் திட்டத்திற்காக இலங்கை – இந்தியச் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் நாம் வெளியிட்டிருக்கும் இந்த “தொலைநோக்கு” அறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.” என ஜனாதிபதி தெரிவித்தார்.