இந்திய – இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
இதனூடாக தமிழ் மக்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய கட்டமைப்பு குறித்தும் பராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையின் கட்டமைப்பு இன மற்றும் மத இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் மத ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் அவர் டில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.