இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கைக்கு வருகிறார்.
நமது அண்டை நாடான இலங்கை உடன், இந்தியா நட்புறவை பேணி வருகிறது. பொருளாதார நெருக்கடி, டிட்வா புயல் பாதிப்பு உள்பட பல்வேறு பேரிடர்களை இலங்கை சந்தித்தபோதெல்லாம் இந்தியா ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்ததோடு, மனிதநேயத்துடன் ஏராளமான உதவிகளையும் வாரி வழங்கியது. மேலும் அங்கு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு வீடுகளும் கட்டி கொடுத்துள்ளது. இதுதவிர இந்தியாவின் நிதி உதவியோடு பல்வேறு திட்டங்களும் அங்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக வருகிற 19 மற்றும் 20-ம் திகதிகளில் இலங்கைக்கு வருகிறார். துணை ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவை செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இலங்கைக்கு, இந்தியாவின் துணை ஜனாதிபதி 26 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கிரிஷன் காந்த், இலங்கையின் பெண் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூரியா, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதேபோல இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார். இந்தியாவின் நிதி உதவியோடு சுகாதாரம், உள்கட்டுமானம், எரிசக்தி, சமுதாய மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிகிறார்.
இலங்கையில் இந்தியாவின் சார்பில் வீடுகள், ஆஸ்பத்திரிகள் கட்டப்படும் பணிகள், திரிகோணமலை எண்ணெய் தொட்டி அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்கிறார். தனது 2 நாள் பயணத்தின்போது எரிசக்தி, சமுதாய மேம்பாடு, பிராந்திய வளர்ச்சி, மீனவர் நலன் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் 3 நாள் பயணமாக இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியா வந்தார்.
இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் நல்லுறவு நீடித்து வருகிறது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17-ம்திகதி முதல் 20-ந் திகதி வரை 4 நாள் பயணமாக அனுர குமார திசநாயக இந்தியா வந்தார். அப்போது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார் appeared first on LNW Tamil.