லண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் , இனப்படுகொலை, இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கேள்வி கேட்டவரை பரிகாசம் செய்யும் வகையில், “உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச இயலாதென்றால், தமிழில் பேசவும், எனக்கு தமிழ் புரியும்” என பதிலளித்துள்ளார்.
கேள்வியை எழுப்பிய வைத்தியர் யோகலிங்கம் உடனடியாக, “இங்குள்ள பலருக்கு எனது ஆங்கிலம் புரியும் என நான் நம்புகிறேன்” என அவருக்கு பதிலடி கொடுத்தார்.
இலங்கையின் வடக்கே இடம்பெறும் இனப்படுகொலை, இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் ஆகியவற்றை நிறுத்த அரசு என்ன செய்கிறது என்று அவர் ஜனாதிபதியை நோக்கி கேள்வி எழுப்பினார்.
நாடு கடந்த தமிழீழ அமைப்பின் ஒரு உறுப்பினரான வைத்தியர் யோகலிங்கம், லண்டனில் கன்சர்வேடிவ் என்வயார்மெண்ட் நெட்வர்க் எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் பங்குபெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
இலங்கை தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்கிறது, ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி, தனது கேள்வியை தொடுத்தார். அவர் முடிக்கும் முன்னர் ரணில் இடைமறித்து, “எனக்கு தமிழ் புரியும்” என்று பதிலளித்தார்.
ஜனாதிபதியின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ‘அகம்பாவத்துடன்’ நடந்து கொள்கிறார், ‘ஜனாதிபதி என்ற முறையில் கௌரவாக நடந்து கொள்ளவில்லை ’ என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமாத்திரமன்றி, ‘ரணிலுக்கு தமிழ் புரியுமென்றால், அவருக்கு தமிழர்களின் பிரச்சினை புரியாதா?’ என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம், “உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் அதை நான் படிப்பிக்கிறேன்” என கூறி அவரை சிறுமைப்படுத்திய கானொளி வெளியாகியது. இதையடுத்து தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்.
AR