இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் சிரமங்களை நிவர்த்தி செய்வதற்குமான பேச்சுவார்த்தை ,இன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damiano Francovigh உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். இத்தாலிய குடியரசின் அரசாங்கத்திற்கு இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, அதனுடன் தொடர்புபட்டதாக புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் போது புலம்பெயர தொழிலாளர் தொடர்பில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட ஒரு பயிற்சி நிலையத்தை இலங்கையில் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இத்தாலி நாட்டின் அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள இந்த பயிற்சி நிலையத்தில், இத்தாலியில் வேலை வாய்ப்புகளை நாடும் இலங்கையர்களுக்கு புறப்படுவதற்கு முன் பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஒதுக்கீடு (Job Quota system in Italy.) விடயத்தையும் அமைச்சர் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
தொழில் வாய்ப்புக்களை நாடுவோர் எதிர்கொள்ளும் சவால்களை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், குறிப்பாக இத்தாலியின் தனிப்பட்ட பரிந்துரை அடிப்படையிலான ஒதுக்கீடு முறையின் காரணத்தில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளையும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
இலங்கையர் உரிய முறையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் நீண்ட கால தாமதங்கள், டிஎன்ஏ தேவை மற்றும் விசா நியமனம் செயல்முறைகளின் போது வெளிப்புற தலையீடுகள் உட்பட பல விடயங்களை அமைச்சர் முன்வைத்தார்.