Home » இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

Source

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கெடுப்பின் படி இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் 60.5 வீதத்தால் குறைந்துள்ளதுடன், குடும்பங்களின் மாதாந்த செலவுகள் 91 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

3.4 வீதமான குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், 36.6 வீதமான குடும்பங்களின் வருமானம் மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் குறைந்துள்ள குடும்பங்களில் 73.6 வீதமானவர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், 6 வீதமானவர்கள் கூடுதல் வருமானம் அல்லது கூடுதல் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருமானம் குறைந்த குடும்பங்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கடன் வாங்குதல், நகைகளை அடமானம் வைப்பது, பிறரிடம் உணவு அல்லது பணம் கேட்பது போன்ற உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் 22 வீதமான குடும்பங்கள் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022 மார்ச் மாதத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட இலங்கை சனத்தொகையில் பாதிப் பேர் தங்கள் வேலைகளில் மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பணிகளை நோக்கி பலர் நகர்ந்துள்ளனர்.

பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், பலருக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது, பலருக்கு ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன அல்லது கொடுப்பனவுகள் மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பொருளாதார நெருக்கடியால் 14.2 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் கல்வியும் தடைபட்டுள்ளது, இது தொடர்பான கணக்கெடுப்பில் 3 முதல் 21 வயதுக்குட்பட்ட 54.9 சதவீதம் பேரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகள் காரணமாக, 53.2 சதவீதம் பேர் எழுதுபொருள்களுக்கான செலவினங்களை குறைத்துள்ளனர் அல்லது தவிர்த்துள்ளனர். அதே நேரத்தில் 44 சதவீதம் பேர் புதிய சீருடைகளுக்கான செலவைக் குறைத்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் 29 வீதமான மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 7 வீதமானவர்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிகிச்சை முறைகளை மாற்றியுள்ளனர்.

சிகிச்சை முறைகளை மாற்றிய நோயாளிகளில் 35.1 சதவீதம் பேர் சிகிச்சை அளிக்கும் இடங்களை மாற்றியுள்ளனர். 33.9 சதவீதம் பேர் தங்கள் நோய் தீவிரமடைந்தால் மட்டுமே மருந்துகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிகிச்சையை மாற்றிய நோயாளிகளில் 81.7 சதவீதம் பேர் போதிய நிதி இல்லாததே மாற்றத்திற்கான முதன்மைக் காரணம் எனக் கூறியுள்ளனர்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு நெருக்கடி மிகவும் கடுமையானது. நெருக்கடியை எதிர்கொள்ள மக்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image