இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் புலம்பெயர்ந்த, வைத்திய தம்பதியினருக்கு பிறந்த சங்கரி சந்திரன் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார்.
‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காக தமிழ் குடும்ப பின்னணியைக் கொண்டவரும், சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் வென்றுள்ளார்.
உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்கிறது.
எழுத்தாளர் சங்கரி 60,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதுக்காக தெரிவாகியுள்ளதாக, சிட்னியில் உள்ள தி ஓவோலோ விருந்தகத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது.
“அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. இந்த நிலையில் ‘மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.” என சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற சங்கரியின் பெற்றோர் பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) இலக்கிய விருது என்பது “அவுஸ்திரேலிய வாழ்க்கையை, அதன் எந்தக் கட்டத்திலும் முன்வைக்கும் மிக உயர்ந்த இலக்கியத் தகுதி வாய்ந்த ஒரு நாவலுக்கு” வழங்கப்படும் வருடாந்த இலக்கியப் பரிசாகும்.
My Brilliant Career என்ற பிரசித்தி பெற்ற அவுஸ்திரேலிய நாவலை 1901ஆம் ஆண்டு வெளியிட்ட மைல்ஸ் பிராங்க்ளின் விருப்பத்திற்கு அமைய இந்த விருது வழங்கப்படுவதோடு, இந்த விருதுக்கு நிதியளிப்பதற்காக அவர் ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார்