இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டி வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்தது.
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கட்டுக்களை இழந்து, 230 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 65 பந்துகளுக்கு முகம்கொடுத்து 67 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட ஓட்டங்களை ஸ்திரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல இவரது ஆட்டமே வழிவகுத்தது.
131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் சகல விக்கட்டுக்களையும் இழந்து இலங்கை அணியின் ஓட்டத்தை சமப்படுத்தியது.
இதனால் போட்டி வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்தது. சுழற்பந்துவீச்சாளர்களான வனிந்து கசரங்க, சரித் அசலங்க ஆகியோர் சிறந்த முறையில் பந்து வீசி, தலா இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.
65 பந்துகளுக்கு முகம்கொடுத்து, 67 ஓட்டங்களையும் 39 பந்துகளை வீசி இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றிய துனித் வெல்லாலகே ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை பிற்பகல் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.