இலங்கை மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கும் பிரித்தானிய அரசு
இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பில் பிரித்தானிய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது.
அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தற்போதைய நிலவரம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் ஒன்று நடைபெற்றபது கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசு மீது தமது நாடு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்பினர்.
ஆனால், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டு பிரித்தானிய அரசோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரினாலும்-அப்படியான கடும் நடவடிக்கைகள் எதையும் எடுக்கும் சாத்தியக்கூறு இருப்பதாகத் தோன்றவில்லை.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது தடைகள் விதிப்பது உட்பட நடவடிக்கைகள் eடுக்கப்படும் என்று அந்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட வினாவிற்கு மழுப்பலான பதிலைக் கூறி திட்டமிட்ட வகையில் தடைகள் விதிக்கப்படுவது குறித்து இழுக்கப்படுவதற்கு பிரித்தானிய மறுத்துவிட்டது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவர்கள் மற்றும் துஷிபிரயோகம் செய்தவர்கள் மீது ‘மாக்னிட்ஸ்கி உட்கூறு’ அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை அரசு அராயுமா? என தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின ஜோன் மெண்டோனால், வெளிவிவகாரம், பொதுநலவாய நாடுகள் மற்றும் அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் லியோ டொக்செட்ரியிடம் கேள்வி எழுப்பினார்.
பிரித்தானிய அரசில் ஐரோப்பிய விடயங்களுக்கும் பிரதி அமைச்சராக இருக்கும் அவர், “இந்த அரங்கிலிருந்து கொண்டு அது பற்றி நான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது” என்று கூறி அந்த கேள்வியை புறந்தள்ளினார்.
“மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றி நிலைமாற்று நீதி மற்றும் சட்டரீதியிலான சீரமைப்புகளை ஆகியவை குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி நாங்கள் தொடர்ந்து இலங்கையை வலியுறுத்துவோம்” என அவர் அறிவித்தார்.
இதற்கு மறுமொழியளித்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கோல்பர்ண், “இதை நாங்கள் பல வருடங்களாகக் கோரி வருகிறோம்” ஆகவே இவ்விடயம் குறித்து தமது உணர்வுகள் குறித்த பதிலை அமைச்சர் அளிக்க முடியுமா என வினவினார். அவரது வினாவிற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் டொட்ச்செரி “ இந்திய-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி அமைச்சர் அந்த கோரிக்கையை காலப்போக்கில் கேட்பார் என்றும், அதன் மீது உரிய கவனம் செலுத்துவார்” என்றும் பதிலளித்தார். அவ்வகையில் அந்த கேள்வியிலுள்ள ஆழத்தை அவர் தவிர்த்துவிட்டார்.
’மாக்னிட்ஸ்கி உட்கூறு’ என்பது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்கி, அவர்கள் ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க வழி செய்யும் நடைமுறையாகும்.
இந்த விவாதத்தை, ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே ஏற்பாடு செய்திருந்தார். தனது ஆரம்ப உரையில் இலங்கை விடயம் என்பது “துன்பம் நிறைந்த நீண்ட நெடுங்கதை” என்று குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக 1983ஆம் ஆண்டின் கறுப்பு ஜுலை கலவரத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டது என்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ‘தொடர்ச்சியாக பல தலைமுறைகளாக தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர்’ என்று கூறிய மார்ட்டின் டே, ‘அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படுவது குறித்து அவர் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு முன்னெடுத்த குற்றங்களை இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண்டுமென பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய அரசை வலியுறுத்தினர்.
தொழிற்கட்சியைச் சேர்ந்த சியோபான் மெக்டொனால்ட் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவு பெற்ற காலத்தை நினைவுகூர்ந்து பேசினார். “கடற்கரைகளில் இறந்து கிடந்தவர்களை அவர்களது உறவினர்களால் அப்புறப்படுத்த முடியவில்லை, ஏனென்றால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு அவர்கள் மீது கொத்தணி குண்டுகளை வீசுக் கொண்டிருந்தது” என்றார்.
இந்த கூட்டத்தில் பேசியவர்கள் இறுதிகட்ட யுத்தத்தின் போது போர் குற்றங்களை முன்னெடுத்த இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோரை அரக்கர்கள் என்று வர்ணித்தனர்.
”தமிழ் மக்களின் மன வடுக்கள் ஆறவேண்டுமானால், அதற்கு முதலில் சவேந்திர சில்வா போன்ற அரக்கர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும், மேலும் அவர்கள் தொடர்ந்து தமிழ் மக்களை துஷ்பிரயோகம் செய்யக் கூடிய பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெரி வலியுறுத்தினார். இலங்கை இராணுவம் ‘பிரித்தானிய இராணுவத்தைவிட இரண்டு மடங்கு பெரியது’ என்றும் கூறிய அவர் “அவர்களின் 75% பாரம்பரிய தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்துவது, மனித உரிமை மிறல்களைச் செய்வது மற்றும் நலிந்த நிலையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைப்பது ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது” எனவும் டெரி சாடினார்.
தொடர்ந்து இலங்கையில் இடம்பெறும் மீறல்கள் குறித்து பேசிய சேம் டெரி, 27 நவம்பர் அன்று இடம்பெற்ற மாவீரர் நாள் அஞ்சலி தொடர்பில் ”பாடசாலை சிறுவன் ஒருவர் உட்பட 11 பேர் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அந்த அஞ்சலி நிகழ்வுகளில் அத்துமீறி நுழைந்தனர்”.
பல ஆண்டுகளாகவே பயங்கரவாத தடைச் சட்டம் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கு, அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். ”இதன் விளைவாகவே அண்மையில் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார். தடுத்து வைக்கப்பட்ட சமயத்தில் உயிரிழந்தவர்கள் விடயத்தில் இது மேலும் ஓர் உதாரணம். சில இடங்களில் சித்திரவதைகள் இடம்பெற்றன எனக் கூறப்படுவதையும் நாம் அறிவோம்” என்று ஜோன் மெக்டொனால்ம் கோடிட்டு காட்டினார்.
சுயேட்சை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருக்கும் ஜெரிமி கார்பின், பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு உள்ளது என்பதை குறிப்பிட்டார்.
“நான் 1984 ஆம் ஆண்டு ஒரு குழுவுடன் இலங்கை சென்றேன், அப்போது மனித உரிமைகள் கட்டமைப்பு, அதன் மீறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் ஆகியவை குறித்து நான் அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனவிடம் கேள்வி எழுப்பினேன். அந்த சமயத்திலிருந்து காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். அந்த வழக்குகள் முடிவுக்கு வராத வரையிலும், அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத வரையிலும், அந்த தனிப்பட்ட குடும்பத்தினரின் அச்சங்கள் தொடரவே செய்யும்” என்றார் கார்பின்.
வலிந்து காணாமல் ஆக்கபப்ட்டோரின் உறவுகள் யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் கையளித்த தமது அன்பிற்குரிய சொந்தங்களுக்கு என்னவாயிற்று என்பதை அறிந்துகொள்ள தொடர்ச்சியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரி 2,500 நாட்களுக்கும் மேலாக வீதிகளில் போராடி வருகின்றனர்.
இந்த விவாதத்தில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் போனவர்களை தேடுவதில் கடந்த 15 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு ஒரு குறிப்பை லண்டனிலுள்ள இலங்கை தூதரகம் அனுப்பியுள்ளது என்பதை வெளிப்படுத்தினர்.
“16 பேர் உயிருடன் எங்கிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது, மூவர் இறந்துவிட்டனர்-அதாவது காணாமல் போனவர்கள் என தான் குறிப்பிட்ட 18,000 பேரில் 19 பேர் பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இன்னும் காணமால் இருக்கும் 17,981 பேரை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது” என்றார் ஆன் மக்லாவ்லின்.
ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி எம்.பி ஜிம் ஷானன் பேசும் போது, “பயங்கரவாத தடைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மனித உரிமை மீறல்களையும், தமிழர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இதர மக்களின் நிலையை மேம்படுத்தவும் சிறிதளவே பயன்பட்டுள்ளது” என்று கூறியதுடன், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வைக்கப்படும் அனைத்து வாதங்களும் அது ஏகமனதாக கண்டிப்பதாகவே உள்ளது. அதை லியோ டொட்செட்ரியும் அங்கீகரிக்கிறார். ”அது தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது-ஆமாம், கடந்த வாரம் கூட அது பிரயோகப்படுத்தப்பட்டது”.
ஐ நா போன்ற சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச மனித உரிமை தரங்களை எட்டும் வகையிலான மாற்று சட்டத்தை இலங்கை இயற்றலாம் என வலியுறுத்தியுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமொன்று இலங்கை நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. அது தற்போதிருக்கும் சட்டத்திற்கு மாற்றாக இயற்றப்படுகிறது. எனினும் பிரித்தானிய சட்டவாளர்களிடம் அது தொடர்பில் அவநம்பிக்கையே நிலவுகிறது.
“அந்த சட்டம் இப்போது நீக்கப்படலாம், ஆனால் உத்தேச மாற்றுச்சட்டம்-பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் இதைவிட மோசமாக இருக்கலாம். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அரசின் எண்ணப் போக்கில் மாறவில்லை” என்றார் மார்ட்டின் டே.
கடந்த 2021இல் இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பிலான திட்டத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம் “எதிர்காலத்தில் பொறுப்புக்கூறல் வழிமுறைகளை வலுப்படுத்தும் சாத்தியக்கூறுள்ள உத்திகளை வளர்த்தெடுக்க தகவல்களை சேகரிப்பது, தொகுப்பது, ஆராய்வது மற்றும் பாதுகாப்பது” ஆகியவை திட்டமிடப்பட்டது.
“ஐ நாவின் நிபுணர்கள் குழு போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கு நம்பகமான ஆதாரங்களை காணவும், நீதி வழங்கப்படுதல் இடம்பெறுவதையும் காண விழைந்தனர்” என்று நிழல் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் கூறினார்.
தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் நடவடிக்கை எடுக்காததால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நியாயம் வேண்டி இடைவிடாமல் சர்வதேசத்தில் தலையீட்டைக் கோரி வருகின்றனர். இலங்கையை முன்னர் ஆட்சி செய்த பிரித்தானிய அது தொடர்பில் காத்திரமான பங்கு வகிக்காமல், ராஜத்ந்திர ரீதியில் இலங்கையுடன் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் சாத்தியமாகவில்லை.
பிரித்தானிய அரசின் தயக்கத்தை கண்டு சியோபன் மெடொனாஹ் எரிச்சலுடன் காணப்பட்டார்.
“எப்போதும் பேச்சுவார்த்தை, எப்போதும் பேசுவது, எப்போதும் அமைதியாக இருப்பது என்கிற எண்ணம் உள்ளது-ஆனால் ஒன்றும் செய்வதில்லை. எதற்காக பேச்சுவார்த்தை? ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் இதுவரையில் போர்க் குற்றத்திற்காக ஒருவர் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை, முன்னரும் பதிலில்லை இப்போதும் பதிலில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கொட்டினார் சியோபன் மெக்டொனால்ட்.