இஸ்ரேலின் தாக்குதல்களால் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்றைய தாக்குதல்களில் சுமார் 50 லெபனானியர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் பிரதமர் தெரிவித்தார். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள் 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஆந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவிற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட தலைவரான ஹசன் கலீலும் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே கொல்;லப்பட்டார்.
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் பிரதமர் நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, ஹமாஸ் அமைப்பையும், ஹிஸ்புல்லா அமைப்பையும் ஓரளவு பலவீனப்படுத்துவதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக ஈரான் ஆன்மீக தலைவர் அயதுல்லா அல் கமேனியின் பாதுகாப்பை பலப்படுத்த ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே லெபனானில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது. வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலை நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த நிலையில், தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர லெபனான் அரசாங்கத்திற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது இஸ்ரேல் இராணுவம் லெபனான் எல்லையை நெருங்கிவிட்டது. ஹிஸ்புல்லாவின் தலைமை வலுவிழந்து விட்டதால், இந்த நேரத்தில் அவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.